Wednesday, August 5, 2009

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா : கலைஞர்-எடியூரப்பா சந்திப்பு




கடந்த திங்கட்கிழமை பெங்களூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கு அனைத்துக் கட்ட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள், கன்னட சங்கத்தலைவர்கள் ஒருமித்த ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை செவ்வாய்க்கிழமை காலை பெங்களூர்த் தமிழ் சங்க நிர்வாகிகள் சந்தித்து அவருக்கு சந்தன மாலை மற்றும் மைசூர் தலைபாகை அணிவித்து நன்றி தெரிவித்தனர். பிற்பகலில் திருவள்ளுவர் சிலை திறப்பு தொடர்பாக 13 தமிழ் அமைப்புகள் அடங்கிய கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் எடியூரப்ப ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் எடியூரப்பாவிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தமிழ் அமைப்புகளின் பாராட்டினை ஏற்றுக் கொண்ட எடியூரப்பா திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யும்படி தமிழ் அமைப்பின் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எடியூரப்பா பேசுகையில், " கர்நாடகத்தின் வளர்ச்சி மற்றும் பெங்களூர் நகர வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மகத்தானது. அரசியல் பக்குவ குறைவு காரணமாக 18 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடியாமல் போனது. இப்போது காலம் கூடிவந்துள்ளது. திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டியதன் அவசியம் கருதி நான் அதில் கவனம் செலுத்தியதால் எல்லோரது ஆதரவுடன் இப்போது சிலை திறக்கப்படவுள்ளது. சிலை திறக்கப்படுவதால் தமிழர்-கன்னடர் இடையே நல்லிணக்கம் ஏற்படும். இதற்குமுன் திருவள்ளுவர் சிலையை பிரச்சனையாக வைத்துக் கொண்டு இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவை கெடுக்க முயன்றனர்" என்றார்.

தமிழ்ச் சங்க செயளர் கோ.தாமோதரன் கூறும் போது, " அனைத்து அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், கன்னட போராட்டக்காரர்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்று 18 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையைத் திறக்க முதல்வர் எடியூரப்பா எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் பாராட்டத் தக்கது. நில, நீர், மொழி பிரச்சனைகளில் நாங்கள் கர்நாடகத்துடனேயே இருப்போம்" என்றார்.

தமிழ் சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் பேசுகையில், " மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகளில் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு அளிப்போம். சிலையைத் திறக்க சில கன்னட அமைப்புகள் இதிர்ப்பு தெரிவித்துபந்த் நடத்துவதாக அறிவித்துள்ளன. திருவள்ளுவர் மதம், மொழி, மாநிலங்களுக்கு அப்பாற்பட்டவர். திர்ர்வள்ளுவர் சிலையைத் திறக்க 18 ஆண்டுகளாக போராடினோம். எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்த அரசிடம் திருவள்ளுவர் சிலை திறப்பு கோரிக்கையை பலமாக வலியுறுத்தினோம். அதை அரசு நிறைவேற்றியுள்ளது பாராட்டத்தக்கது" என்றார்.

கலைஞர்-எடியூரப்பா சந்திப்பு:
பெங்களூரி ஓய்வெடுத்துவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று (செவ்வாய்கிழமை) சந்தித்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி திறக்கப்படவுள்ள திருவள்ளுவர் சிலை விழா ஏற்பாடுகள் குறித்தும் சென்னையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி திறக்கப்படவுள்ள கன்னட கவிஞர் சைவக்ஞர் சிலை திறப்பு விழா குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் 9ஆம் தேதி பெங்களூரில் திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலை விழாவிற்காக கர்நாடக அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழை தமிழக முதல்வர் கருணநிதியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்ப வழங்கி முறைப்படி வரவேற்றார்.

அழைப்பிதழ்:

வண்ணமயமான இந்த அழைப்பிதழ், மொத்தம் 4 பக்கங்கள் கொண்டது. முதல் பக்கத்தின் மேல் பகுதியில் கர்நாடக அரசின் சின்னமும், அதன் கீழே பிரம்மாண்டமாக அமர்ந்த திருவள்ளுவரின் புகைப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பக்கத்தில்(இடதுபுறம்) முதல்வர் எடியூரப்பாவின் புகைப்படம் மேலே அச்சடிக்கப்பட்டுள்ளது. கீழே கன்னடத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறும் நாள், கிழமை போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. வலதுபுறத்தில்(3ஆம் பக்கம்) தமிழக முதல்வர் கருணநிதியின் புகைப்படம் மேலேயும், கீழே நிகழ்ச்சி குறித்த விவரங்கள் தமிழிலும் அச்சடிக்கப்படுள்ளன. கடைசி பக்கத்தில் திருவள்ளுவரின் சிறிய படம் இடம்பெற்றுள்ளது. திருவள்ளுவரின் படத்தின்கீழே "திருவள்ளுவர் 2040 வருடங்களுக்கு முன்பு பிறந்தவர். மனிதன் மனிதனாக வழ்வதற்கு தேவையான நெறிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய பிரிவுகளாக பிரித்து, எந்த தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடாமல் 1330 பாடல்களை இயற்றி, உலகுக்கு தேவையான நீதி நெறிகளை கூறியுள்ளார். தன்னுடைய பாடல்களில் எந்த ஒரு நாட்டைப் பற்றியே, ஒரு தனிமனிதனைப் பற்றியோ பெயரை குறிப்பிடாமல் சர்வ மதத்தவரும் பாராட்டும் வகையில் வாழ்ந்த ஒரு மகான் திருவள்ளுவர்" என்று கன்னடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்பு:

கர்நாடக சட்டப்பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் 13ஆம் தேதி நடைபெறும் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் கர்நாடகாவின் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு அமைச்சர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர். அதேபோல் பெங்களூரில் 9-ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tuesday, August 4, 2009

முன்னாள் முதல்வர் ந. ரங்கசாமி பிறந்த நாள் : மாநிலம் முழுவதும் கொண்டாடம்






முன்னாள் முதல்வர் ரங்கசாமி இன்று தனது 60வது பிறந்தநாளை தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவரது ஆதரவாளர்கள் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். அவரது பிறந்த நாளையட்டி உழவர்கரை நகராட்சி தலவர் ஜெயபால் தலைமையில் மணக்குள விநாயகர் கொயிலில் இன்று காலை தங்கத் தேர் இழுத்தனர். மேலும், திலாஸ்பேட்டை காளி கோயில், கதிர்காமம் முருகன் கோயில் சண்முகாபுரம் முருகன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விவிபி நகரில் 1000 பேருக்கும், பத்துகண்ணு பகுதியில் 500 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கதிகாமத்தில் 60 பேர் கண்தான உறுதிப்பத்திரம் வழங்கினர். சாரதாம்பாள் நகரில் உள்ள ஊனமுற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதுபோல் புதுவை நகரின் பல இடங்களிலும் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் செய்திருந்தனர்.

சட்ட சபையில் வாழ்த்து:
சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மதிமுக உறுப்பினர் பேசி முடித்ததும் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு இன்று பிறந்த நாள். அனைத்து உறுப்பினர்கள் சார்பில் அவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

புதுவை பட்ஜெட் நாளை தாக்கல்



புதுவை சட்டசபையில் நாளை(புதன்கிழமை) 2009-10ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் மாற்றத்திற்குபின் புதுவையில் 2வது முறையாக முதல்வர் பதவி ஏற்றுக்கொண்ட வைத்திலிங்கம் நாளை காலை 11 மணிக்கு நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்கிறார்.

6-வது சம்பளக் குழு பரிந்துரையை கடந்த ஆண்டு நடைமுறப்படுத்தியதால் வள ஆதாரங்கள் குறைந்தது. நிலுவைத் தொகை வழங்க இருப்பதால் மேலும் வள ஆதாரங்கள் குறையும். எனவே கூடுதல் வள ஆதாரங்களை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நிதிநிலை ஆறிக்கையினைத் தயாரிக்கும் பணியில் முதல்வர் வைத்திலிங்கம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிக்கலாம், எவைகளுக்கு வரி நீக்கலாம் என அதிகாரிகளுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. விலைவாசி உயர்வு கடுமையாக இருப்பதால் அத்தியாவசிய பொருட்களுக்கு வரி குறக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி, இலவச பஸ் பாஸ், காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் மர்றும் சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, August 3, 2009

புதுவை பட்ஜெட் ரூ.4,133 கோடி : ஆளுநர் உரையில் தகவல்


புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை துணைநிலை ஆளுநர் திரு இக்பால் சிங் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் அவர்கள் உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். அவரைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அவரது உரையைத் தமிழில் வாசித்தார்.

ஆளுநர் அவர்களின் உரையை தமிழில் முழுமையாக வாசிக்க சொடுக்கவும் இங்கே.
ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே

Friday, July 31, 2009

வில்லியனூர் மாதா குளத்தில் பிரான்ஸ் நாட்டு புனித தீர்த்தம்



வில்லியனூர் மாதா ஆலய குளத்தில் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் புனித தீர்த்தம் ஊற்றும் விழா, மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழவையட்டி காலை 5.30 மணிக்கு திருப்பலியும், குளத்தைச் சுற்றி சிறிய தேர் பவனியும் நடக்கிறது. காலை 6.30 மணிக்கும் பகல் 11.30 மணிக்கும் திருப்பலி பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொவில் வளாகத்தில் நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் வில்லியனூர் மாதா குளத்தில் பிரான்சு நாட்டின் லூர்து நகர் புனித தீர்த்தம் கலக்கப்படுகிறது. விழவிற்கு முன்னாள் பேராயர் மைக்கல் அகஸ்ட்டின் தலைமை தாங்குகிறார். விழா ஏற்பாடுகளை வில்லியனூர் மாதா கொவில் பங்கு தந்தை ரிச்சர்ட் அடிகளார் தலைமையில் பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

சிறுநீரகக் கல்லுடைப்பு கருவி: பொதுமக்களுக்கு நாளை அர்ப்பணிப்பு


புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ரூ.2.25 கோடி செலவில் அதிவலை சிறுநீரக கல்லுடைப்பு கருவி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதனை மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் தலைமையில் முதலமைச்சர் வெ.வைத்திலிங்கம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் இ.வல்சராஜ் ஆகியோர் முன்னிலையில் புதிய கருவியை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்ணிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சிவக்குமார், நகராட்சி தலைவி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த கருவியைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையில் நோயாளியின் உடலில் இயற்கைத் துளைகள் மூலமோ, வேறு துளையிட்டோ எந்த கருவியையும் உள்நோக்கி செலுத்தப்படுவதில்லை. நோயாளியின் உடலில் எந்தக் காயமும் ஏற்படுத்தப்படுவதில்லை. நோயாளியின் உடலுக்கு எந்தவகை பாதிப்பும் இன்றி வெளியிலிருந்து உருவாக்கப்படும் அதிவலைகள் மூலம் சிறுநீரக கற்கள் உடைக்கப்படுகின்றன. மயக்க மருந்துகள் கொடுக்கப்படுவதும் இல்லை.

மேலும் புறநோயாளியாக இருந்து ஒன்று அல்லது 2 மணி நேரத்திற்குள் சிகிச்சை பெறலாம், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மறுநாளிலிருந்தே தனது வழக்கமான பணிகளைச் செய்யலாம். இந்த முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 நோயாளிகள் சிகிச்சை பெறமுடியும்.

வீட்டு வசதி வாரியத் தலைவராக அங்காளன் நியமனம்


புதுவை மாநிலம் திருபுவனை தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அங்காளன். இவர் சட்டமன்ற அரசு கொறடாவாகவும் உள்ளார். இவர் தற்போது வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் பிறப்பித்துள்ளார். விரைவில் வீட்டு வசதிவாரிய தலைவராக பதவியேற்க உள்ள அங்காளன் முன்னாள் முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராகவும், கதர்வாரிய தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 3-ம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகு காலியாக உள்ள மற்ற வாரிய தலைவர்கள் பதவிகள் நிரப்பப்படும் என்று தெரிகிறது.