Sunday, October 11, 2009

உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை-மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை


உரிமம் இல்லாமல் பட்டாசுத் தயாரிப்பவர்கள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  


இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு கோ. ராகேஷ் சந்திரா விடுத்துள்ள அறிக்கையில் கூரியிருப்பதாவது :- 1884 ஆம் ஆண்டு இந்திய வெடிபொருட்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு புதுச்சேரி மாவட்டத்தில் பட்டாசு தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி அலுவலகம் உரிமம் வழங்கி வருகிறது. மேலும், அரசு ஒப்புதலுடன் புதுச்சேரி பகுதியிலுள்ள பட்டாசுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. வருவாய், தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரம் அளிக்கப்பட்டு அந்நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் இல்லாமல் பட்டாசுத் தயாரிப்பவர்கள் மற்றும் உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு சிலர் குழுவாக சேர்ந்து உரிமம் பெறாமல் மொத்தமாக பட்டாசுகளை வாங்கி தங்களுக்குள் பிரித்துக்கொள்வது, அவற்றிற்காக வெடிபொருட்களை ஒரு இடத்தில் இருப்பு வைப்பது போன்றவையும்கூட சட்டத்திற்கு புறம்பானதாகும். சிசெயலால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சட்டத்திற்கு புறம்பான இந்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அந்த அற்க்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


மேலும் பொதுமக்கள் கவனத்திற்காக கீழ்கண்ட நெறிமுறைகளையும் அவர் கூறியுள்ளார் 
1. உரிமம் இல்லாமல் பட்டாசுகளைத் தயரிக்கக்கூடாது. 
2. உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்கக்கூடாது 
3. அரசு அளித்துள்ள பட்டாசுத் தயாரிப்பு மற்றும் விற்பனை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் 
4. பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள், உரிமம் பெறப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வேறு இடங்களில் விற்பனை செய்வது சட்டப்படி தண்டணைக்குரிய குற்றமாகும். 
5. அரசின் உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்பனைக்காக வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் வெடிமருந்துச் சட்டம் 1884-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். 
6. பட்டாசுக் கடைகள் முன்பு மணல் மூட்டைகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீயணைப்புச் சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். 
7. அரசின் விதிமுறைகள் முழுமையாகவும் கட்டாயமாகவும் பின்பற்றப்பட வேண்டும்.


இத்தகைய செயல்பாடுகளைக் கண்காணிக்க பறக்கும் படை அமைக்க துணை மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறைக்கும் உத்திரவிடப்பட்டுள்ளது. வெடிபொருட்களை பயன்படுத்தும் அனைத்துத் தொழிற்சாலைகள், பட்டாசுத் தயாரிக்கும் இடங்கள், சில்லறை விற்பனை செய்யப்படும் இடங்கள் அனைத்தும் இந்த பறக்கும் படை கண்காணிக்கும். உரிமம் இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் பட்டாசு இருப்பு வைத்திருந்தாலும் அவை பறிமுதல் செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


-மகரந்தன்

No comments:

Post a Comment