Friday, July 31, 2009

வில்லியனூர் மாதா குளத்தில் பிரான்ஸ் நாட்டு புனித தீர்த்தம்



வில்லியனூர் மாதா ஆலய குளத்தில் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் புனித தீர்த்தம் ஊற்றும் விழா, மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழவையட்டி காலை 5.30 மணிக்கு திருப்பலியும், குளத்தைச் சுற்றி சிறிய தேர் பவனியும் நடக்கிறது. காலை 6.30 மணிக்கும் பகல் 11.30 மணிக்கும் திருப்பலி பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொவில் வளாகத்தில் நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் வில்லியனூர் மாதா குளத்தில் பிரான்சு நாட்டின் லூர்து நகர் புனித தீர்த்தம் கலக்கப்படுகிறது. விழவிற்கு முன்னாள் பேராயர் மைக்கல் அகஸ்ட்டின் தலைமை தாங்குகிறார். விழா ஏற்பாடுகளை வில்லியனூர் மாதா கொவில் பங்கு தந்தை ரிச்சர்ட் அடிகளார் தலைமையில் பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

சிறுநீரகக் கல்லுடைப்பு கருவி: பொதுமக்களுக்கு நாளை அர்ப்பணிப்பு


புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ரூ.2.25 கோடி செலவில் அதிவலை சிறுநீரக கல்லுடைப்பு கருவி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதனை மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் தலைமையில் முதலமைச்சர் வெ.வைத்திலிங்கம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் இ.வல்சராஜ் ஆகியோர் முன்னிலையில் புதிய கருவியை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்ணிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சிவக்குமார், நகராட்சி தலைவி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த கருவியைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையில் நோயாளியின் உடலில் இயற்கைத் துளைகள் மூலமோ, வேறு துளையிட்டோ எந்த கருவியையும் உள்நோக்கி செலுத்தப்படுவதில்லை. நோயாளியின் உடலில் எந்தக் காயமும் ஏற்படுத்தப்படுவதில்லை. நோயாளியின் உடலுக்கு எந்தவகை பாதிப்பும் இன்றி வெளியிலிருந்து உருவாக்கப்படும் அதிவலைகள் மூலம் சிறுநீரக கற்கள் உடைக்கப்படுகின்றன. மயக்க மருந்துகள் கொடுக்கப்படுவதும் இல்லை.

மேலும் புறநோயாளியாக இருந்து ஒன்று அல்லது 2 மணி நேரத்திற்குள் சிகிச்சை பெறலாம், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மறுநாளிலிருந்தே தனது வழக்கமான பணிகளைச் செய்யலாம். இந்த முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 நோயாளிகள் சிகிச்சை பெறமுடியும்.

வீட்டு வசதி வாரியத் தலைவராக அங்காளன் நியமனம்


புதுவை மாநிலம் திருபுவனை தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அங்காளன். இவர் சட்டமன்ற அரசு கொறடாவாகவும் உள்ளார். இவர் தற்போது வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் பிறப்பித்துள்ளார். விரைவில் வீட்டு வசதிவாரிய தலைவராக பதவியேற்க உள்ள அங்காளன் முன்னாள் முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராகவும், கதர்வாரிய தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 3-ம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகு காலியாக உள்ள மற்ற வாரிய தலைவர்கள் பதவிகள் நிரப்பப்படும் என்று தெரிகிறது.

துணைநிலை ஆளுநர் சர்வமத பிரார்த்தனை




புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் மணக்குள விநாயகர் கோவிலுக்கு குடுபத்தினருடன் சென்று சாமி கும்பிட்டார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். இதனையடுத்து முல்லா வீதியில் உள்ள பல்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டார்.

Thursday, July 30, 2009

தமிழ்நாடு, புதுச்சேரி நீதிமன்றங்கள் நாளை(31-07-2009) புறக்கணிப்பு : வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு


நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சம்மேளம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. காசோலை மோசடி வழக்குகளை தாக்கல் செய்யும்போது அதன் மதிப்பில் பாதித்தொகையை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது

2. நுகர்வோர் நீதிமன்ற தலைவர்களாக நியமிக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதை 65 வயதாக உயர்த்த வேண்டும்

3. சட்ட ஆலோசனை வழங்கினால் சேவை வரி வசூலிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்

4. வழக்கறிஞர்கள் மீது காவல் துறையினர் பொய்வழக்கு பதிவு செய்வதைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசும் உயர்நீதி மன்றமும் ஒரு குழு அமைக்க வேண்டும்

5. வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்த வேண்டும்

6. வ்வொரு நீதிமன்றத்திலும் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி நாளை ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த வழக்கறிஞர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

நீதியின் முன்

முந்தைய பதிவின் தொடச்சி...


(மேடையில் சர்று நேரம் அமைதி நிலவுகிறது. சன்னமான குரலில் அசரீரியாய் பாடல் ஒலிக்கிறது)

அசரீரி : ஆராரோ... ஆராரோ... ஆராரோ... ஆரீரரோ...
ஆராரோ... ஆராரோ... ஆரீரரோ... ஆரீரரோ...

உன்
பாட்டன் அடிச்ச பறை
ஓட்டை விழுந்துபோய்
ஓட்டை விழுந்த பறை
ஓட்டுமேலே காயுதய்யா !

வயோதிகன் : யார் அது.... யார் அது.... எங்களின் பழங்கதையை எங்களின் சொந்த ராகத்திலேயே பாடுவது யார். . . யார் . . .
(சுற்றும் முற்றும் தேடுகிறான்)

அசரீரி : பலமான சிரிப்புச் சத்தம் எதிரொலிக்கிறது) என்ன பெரியவரே ! வந்த வேலையை மறந்து சுகமான உறக்கமா?

வயோதிகன் : யார் நீ... யார் நீ... என் பரம்பரைக் கதையைப் பாடுகிறாயே... யார் நீ...

அசரீரி : நான் மூட்டைப் பூச்சி. உங்களால் நசுக்கப்படுவதற்கென்றே பிறந்த ஜீவன்களில் ஒன்று. இதோ உனக்குப் பக்கத்தில் தொங்குகிறதே வாயிற்காவலின் அங்கி அதிலிருந்துதான் பேசுகிறேன்.

வயோதிகன் : (அந்த அங்கியை எடுத்து புரட்டிப் பார்க்கிறான்) ஏ... மூட்டைப் பூச்சியே.. பிற உயிர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அற்பம் நீ. என்னை ஏளனம் செய்கிறாயா ?

அசரீரி : வாயிற்காவலனிடம் காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறாயா ? (ஏளனமாகச் சிரித்தபடி) மனிதன் வெப்பப் பிராணிதான். தன் கோபமோ, கோரிக்கையோ மேலிடத்தில் செல்லாதபோது ! (ஏளன சிரிப்புச் சத்தம் உயர்ந்து அடங்குகிறது)

வயோதிகன் : என் நிலைமை உனக்கும்கூட ஏளனமாகத் தெரிகிறதா ? அது சரி.... என் பாடல் உனக்கு எப்படித் தெரியும் ?

அசரீரி : உனக்கும் வாயிற்காவலனுக்கும் சம்பாஷணைகளை தினம் தினம் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறேன். அவன் உன்னைத் திருப்பி அனுப்பும் போதெல்லாம் இந்தப் பாடலைத்தானே முணுமுணுத்துக் கொண்டு திரும்பி வருகிறாய்.

வயோதிகன் : நீதி என்பது நிச்சயம் எல்லோரும் எப்போதும் சென்று பார்க்கக்கூடிய ஒன்றுதானே ? ஆனால் எனக்கு மட்டும் எத்தனை சோதனைகள். நான் அதிர்ஷ்டமே இல்லாதவன். நீயாவது எனக்கு உதவக் கூடாதா? அந்த வாயிற் காவலனிடம் சிபாரிசு செய்யக் கூடாதா? அல்லது அவன் மனதையாவது மாற்றக்கூடாதா ?

அசரீரி : அதிர்ஷ்டத்தையும் சிபாரிசையும் நம்பி உங்களின் ஆணிவேரை இழந்து விட்டீர்களே. உன் வாழ் நாளில் இதுவரை எப்போதாவது, எங்கேயாவது எதிர்கேள்வி கேட்டதுண்டா ? எனக்கு இப்போதெல்லாம் மனித ரத்தம் ருசிப்பதில்லை. மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.

வயோதிகன் : அப்படியென்றால்.... மனிதன் இறந்துவிட்டானா ?

அசரீரி : இல்லை... எல்லா இடங்களிலும் கையேந்தியபடியே செத்துக் கொண்டிருக்கிறான்.

வயோதிகன் : ஏ.... மூட்டைப் பூச்சியே... நீ என்னைக் குழப்புகிறாய்.

அசரீரி : எப்போதெல்லம் உங்கள் மேலாடை கந்தலாகிறதோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், "இனியும் இது நீடிக்கக் கூடாது" என்று. வெற்றிகரமாக, மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறீர்கள், ஒரு துண்டு துணியோடு. நல்லது. துண்டு துணி சரிதான். ஆனால் முழு ஆடை எங்கே ? எப்போதெல்லாம் பசித்தீயால் கருகித் தீய்கிறீர்களோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், இனியும் இது நீடிக்கக் கூடாது" என்ற முடிவோடு. உற்சாகத்தோடு திரும்பி வருகிறீர்கள்; நாலு பருக்கைகளைப் பெற்றுக் கொண்டு. நல்லது, பருக்கைகளும் ஒருவகையில் சரிதான். ஆனால் முழு சாப்பாடு எங்கே ? எதிர் கேள்வி கேட்டதுண்டா ? உங்கள் இனத்தில் ரோஷமுள்ள ஒரு கவிஞன் கேட்டதைத்தான் நான் திருப்பிக் கேட்டேன். (ஏளனமான சிரிப்பு பலமாகக் கேட்கிறது) (சிரித்தவாறே) மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.
( சிரிப்பு தொடர்கிறது)

வயோதிகன் : போதும்.... போதும்... நிறுத்து....
(யோசித்தபடி அமர்கிறான். பின் மெல்ல எழுந்து முணுமுணுத்தபடி கோட்டை வாயிலை அடைகிறான். வாயிற்காவலனும் வயோதிகனும் சைகையினாலேயே விவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது)

வாயிற்காவலன் : (சத்தமாக) ...... நிறுத்து ! என்ன வேண்டும் என்கிறாய் இப்போது ? உன்னை லேசில் திருப்திப்படுத்த முடியாது.

வயோதிகன் : எல்லோரும் நீதியைக் காணத்தான் போராடுகிறார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளில் என்னைத்தவிர வெறு யாரும் இந்த வழியே உள்ளேபோக அனுமதி கேட்டு வரவில்லையே.

வாயிற்காவலன் : வேறு யாரையும் இங்கே அனுமதிக்க முடியாது (பலமாகச் சிரிக்கிறான்). ஏனென்றால் இந்த வாசல் உனக்காகவே செய்யப்பட்டது. உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்...(சிரிப்பு) உனக்கான இந்தக் கதவு இதுநாள் வரை திறந்துதானே இருந்தது. உள்ளே எந்தப் பலசாலியும் இல்லை. உண்மையில் என்னைவிட நீதான் பெரிய பலசாலி. ஆனால்... உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்.(சிரிப்பு). போ...போ... கதவை மூடப்போகிறேன்.

(அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்துகிறான்)

வயோதிகன் : ஏ... மூட்டைப் பூச்சியே... எங்கே போய்விட்டாய்.... இருக்கியா...

என்
நெஞ்சில் அடிச்ச பறை
நின் காதில் கேக்குதில்லே
சாவை அடவாக்கி
சதிராடி மகிழ்ந்திடுவாய்
(பாடலைப் பாடியவாறு கீழே வீழ்கிறான்)

- நிறைவு -





திருவள்ளுவர் சிலை திறக்க மீண்டும் எதிர்ப்பு


திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட்டு 9 ஆம் தேதி பெங்களூரில் பந்த் நடத்தப்படும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.

திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை பெங்களூரில் நடைபெற்றது. கன்னட சலுவாளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகரஜ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கன்னட சேனை, கர்நாடக ரக்ஷணாவேதிகே மற்றும் கன்னட வேதிகே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியிருப்பதாவது, " பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிப்பு தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி பெங்களூர் மற்ரும் சாம்ராஜ் நகர் ஆகிய நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கும்படியோ, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை நிறுவுங்கள் என்றோ தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்டிருக்கவில்லை.

ஆனால் எடியூரப்பா தானாகவே முன்வந்து திருவள்ளுவர் சிலையைத் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியில் மிகப்பெரியத் திட்டம் உள்ளது. சர்வஞர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு நிறுவப்பட்டால் காவிரிப் பிரச்சனை ஏற்படும்போது அச்சிலையைத் தமிழர்கள் அடித்து உடைக்கலாம், கல்வீசித் தாக்கலாம். அவ்வாறு ஏற்பட்டால் அது சர்வக்ஞருக்கு அவமதிப்பு ஏற்படுத்துவது ஆகும். அதற்கு நாம் ஏன் அவகாசமளிக்க வேண்டும்? சர்வக்ஞர் சிலையை நிறுவ அரசு விரும்பினால் பெங்களூரில் விதானசௌதா முன்னால் நிறுவட்டுமே?" என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது.

பிரபாகர் ரெட்டி (கன்னட வேதிக தலைவர்): சந்தனக் கடத்தல் வீரப்பனால் மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டிருந்தபோது, அவரை விடுவிக்க வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் என்பதாகும். இப்போது திருவள்ளுவர் சிலையைத் திறப்பதன்மூலம் வீரப்பன் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முற்பட்டுள்ளது. இது துரதிருஷ்டவசமானது. திருவள்ளுவர் சிலையைத் திறக்க ஆர்வம் காட்டும் தமிழ் அமைப்புகள் அனைத்தும் வீரப்பனுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான்" என்று அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வீர உரை முழங்கியுள்ளார்.

சிவராமே கௌடா (கர்நாடக ரக்ஷணா வேதிக) : பெங்களூரில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி தேர்தலில் அவர்களது வாக்குகளை பெறும் நோக்கத்தோடே அரசு இப்போது திருவள்ளுவர் சிலையைத் திறக்க முன்வந்துள்ளது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதால் தமிழர்கள், கன்னடர்களிடையே உள்ள உறவு மேலும் வலுப்படும் என்று முதல்வர் எடியூரப்ப தெரிவித்திருப்பது கேளிக்குரியது. ஒகேனக்கல் பிரச்சனை, கன்னடத்துக்கு செம்மொழி வழங்குவதை எதிர்த்து உள்ள வழக்கு ஆகியவை இருக்கும்போது இது எப்படி சாத்தியமாகும்" என்று இவரும் தன் பங்கிற்கு மூளையைக் கசக்கியுள்ளார்.

Wednesday, July 29, 2009

மகான் அரவிந்தர் தபால்தலை விரைவில் வெளியீடு : மத்திய அமைச்சர் நாராணசாமி தகவல்


மத்திய திட்டம், பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் V. நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "நான் கல்வி அமைச்சர் கபில் சிபலை கடிதம் மூலமும் நேரடியாகவும் தொடர்புகொண்டு தேசிய தொழில்நுட நிறுவனத்தில் 35 இடங்கள் புதுவை மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்; புதுவையில் என்.அய்.டி கல்வி நிறுவனம் வருவதற்கு முன்பாக இது தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை அமைச்சரும் எற்றுக் கொண்டு 35 இடங்களை புதுவைக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இதற்கிடையில் 5 இடங்கள் திருச்சி என்.அய்.டி.யில் ஒதுக்கப்பட்ட இடத்தை ஒன்றாகக் குறைப்பதாக கேள்விப்பட்டு தொடர்ந்து 5 இடங்களை கொடுப்பதற்காக நான் வலியுறுத்தியிருக்கிறேன். தொடர்ந்து இந்த ஆண்டு புதுவை மாணவ-மாணவிகள் என்.அய்.டி.யில் சேர்ந்து படிக்கும் நிலை உருவாக்கித்தர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது, அதுமட்டுமல்லாமல் புதுவை மாநிலத்தில் என்.அய்.டி. நிறுவநனத்தைத் திறப்பதற்கான முயற்சியும் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

தபால் தலை:

மத்திய தபால் தந்தி துறை மந்திரி ராசாவை நானும் அரவிந்தர் ஆசிரமத்தினுடைய நிர்வாகி புருஷோத்தமனும் சந்திது வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி மகான் அரவிந்தர் 100 ஆண்டுகள் நிறைவை ஒட்டி தபால் தலை வெளியிடுவதற்கு கேட்டுக் கொண்டோம். மத்திய அமைச்சர் ராசா அதை ஏற்றுக்கொண்டு 04.04.2010 அன்று சிறப்பு தபால் தலை வெளியிட அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Monday, July 27, 2009

புதிய ஆளுநராக இக்பாசிங் இன்று பதவியேற்பு : புதுச்சேரியின் 22ஆவது கவர்னர்



புதுச்சேரியின் புதிய ஆளுநராக இக்பால் சிங் இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு எச்.எல்.கோகலே அவர்கள் பதவிப் பிரமாணமும் இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர், புதுச்சேரி காவல் துறையினர் அளித்த காவலர் அணிவகுப்பு மரியாதையை துணைநிலை ஆளுநர் அவர்கள் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் திரு V. நாரயணசாமி, முதலமைச்சர் திரு V. வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் துணைநிலை ஆளுநர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஆளுநர் பேட்டி:

புதுவை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், " புதுச்சேரி ஆளுநராக பதவியேற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் நலத்துறைகளில் புதுச்சேரி முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதியான வாழ்க்கையின் மூலம் புதுச்சேரி சிறந்த மனிதவள மேம்பாட்டை அடைந்துள்ளது. புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்ய அளித்த இந்த வாய்ப்பை எற்றுக்கொண்டு அவரிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடுவேன்.

புதுவை மாநிலமானது அழகான தோற்றத்தினால் சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் இருக்கிறது. எனவே சுற்றுலாவின் உள்கட்டமைப்புகளை உருவாக்கி அனைத்து சுற்றுலா பயணிகளையும் வரும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். இதற்கு உறுதுணையாக விமான தளம், துறைமுகம், சாலை, பாலம், சிறப்பு பொருளாதார மண்டலம் போன்றவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். புதுவையில் கல்வியானது வளர்ச்சியடைந்து வருகிறது. மத்திய பல்கலைக்கழகம், 8 மருத்துவ கல்லூரிகள், 15 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவற்றுடன் தேசிய தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகள் இன்னும் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதனால் புதுக்சேரியின் கல்வித்தரம் உயரும் என்பதில் சந்தேகமில்லை. புதுவையில் பால் வளம், மீன் வளம் நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். புதுவையில் பெண்கள், ஆதி திராவிடர், பின்தங்கிய மக்களுக்கு உரிய சம உரிமை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் இணைந்து புதுவையின் பொருளதார வளர்ச்ச்சிக்கு வழி காணப்படும்" என்று கூறினார்.

***

முன்னதாக புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொள்ள நேற்றிரவு இக்பால் சிங் புதுவை ராஜ் நிவாசுக்கு வருகை தந்தார். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் சும்மர் 50 பேர் தெங்கய் உடைத்து, பன்னீர் தெளித்து உற்சாகமாக வரவேற்றனர்.

புதுவை மாநிலத்தின் 22வது ஆளுநராக பதவியேர்றுள்ள இக்பால் சிங் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன் ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றிய்ள்ளார். மேலும் கங்கிரஸ் காரிய கமிட்டியின் சிறப்பு அழைப்பளராகவும் இருந்துள்ளார். கடந்த 1997 முதல் 2001 வரை அகில இந்திஅய காங்கிரஸ் கமிட்டி செயலாளராராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Sunday, July 26, 2009

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா


பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ 1991ஆம் ஆண்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விழா நெருங்கும் நேரத்தில் சில அமைப்புகள் தடை கோரியதால் திறப்பு விழா நிறுத்தப்பட்டது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டபின் அங்கு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக தமிழக முதல்வர் கலைஞர் அறிவித்திருந்தார். சிலை திறப்பது தொடர்பாக தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுடனும் கர்நாடக அரசுடனும் தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில் கடந்த மாத இறுதியில் சென்னை வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் சந்திதார். சிலை திறப்பு குறித்து இருவரும் பேசினர். பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை ஆகஸ்ட் 9-ம் தேதியும் சென்னையில் கன்னட கவிஞ்ஞர் சைவக்ஞர் சிலையை ஆகஸ்ட் 13-ம் தேதியும் திறக்க முடிவானது. இரு மாநிலங்கள் இடையிலான நல்லுறவை சிலை திறப்பு விழாக்கள் மேம்படுத்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையில், பெஙளூரிலும் இடைத்தேர்தல் நடப்பதால் சிலை திறப்பு விழாவுக்கு அனுமதி வேண்டி தேர்தல் கமிஷனுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது. விழவுக்கு தேர்தல் கமிஷனும் ஒப்புதல் அளித்துள்ளதால் விழ ஏற்பாடுகல் தீவிரமடைந்துள்ளன. விழவில் தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்ப, இரு மாநில அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

பெங்களூர் ஏரிக்கரையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பீடத்தில் வைக்க 400 கிலோ எடையில் வெண்கல சிலை தயாராக உள்ளது. 1991-ல் வடிவமைக்கப்பட்ட பைபர் சிலை, பெங்களூர் தமிழ் சங்கத்தில் நிறுவப்படும் என்று பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வள்ளுவர் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் ஆகஸ்ட் 9,10-ஆம் தேதிகளில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளூக்கு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னையில் திறக்கப்பட உள்ள சைவக்ஞரின் சிலை பெங்களூரில் இருந்து பாதுகாப்புடன் சென்னை கொண்டுவரப்பட்டது.

மாயமான மீனவர்களைத் தேடும் பணி தீவிரம் : தலைமை செயலர் கடிதம்

புதுவை வம்பாகீரப்பளையத்தைச் சார்ந்த மீனவர்கள் சுப்பிரமணி, ஜெயபால், நாகப்பன் ஆகிய 3 பேரும் கடந்த 15-ந் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றபோது மாயமானார்கள். அவர்கள் மாயமாகி இன்றுடன் 11 நாட்கள் ஆகும் நிலையில் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடற்பிரிவு காவலர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மீன் வளத்துறை இயக்குநர் ராமலட்சுமி கூறுகையில், " 15ந் தேதி மீன் பிடிக்கச் சென்ற சுப்பிரமணி, ஜெயபால், நாகப்பன் ஆகிய 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை என எங்களுக்கு 18ந் தேதி தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, புதுவை மற்றும் சென்னை கடற்பிரிவு காவலர்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கப்பல் மூலமும் விமானம் மூலமும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மீனவர்கள் மாயமானாது குறித்து அந்தமான் நிக்கோபார் மீன் வளத்துறை இயக்குநர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆழ் கடல் மீன்பிடி படகில் சென்று மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

புதுவை மீனவர்கள் மாயமானது குறித்து வங்க தேசத்தில் உள்ள இந்திய தூரகத்திற்கும், அந்தமான் தலைமை செயலருக்கும் புதுவைத் தலைமைச் செயலர் திரு சந்திரமோகன் தொலைநகலி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

Saturday, July 25, 2009

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து : மத்திய அமைச்சர் நாராயணசாமி தகவல்


மத்திய திட்டம், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திரு V. நாராயணசாமி இன்று சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தியிடமும் இதை வலியுறுத்தியுள்ளோம். பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியகாந்தி உறுதி அளித்துள்ளார்.

கடல் சீற்றம், வறட்சி, போன்றவை ஏற்படும்போது மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நேரடியாக நிதியுதவி அளிக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் இந்த நிதியுதவி கிடப்பதில் சிக்கல் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம்தான் ஆய்வு செய்து புதுச்சேரிக்கு நிதியுதவி அளிக்கிறது. இதையும் மாற்றி மற்ற மாநிலங்ளுக்குக் கொடுப்பதைப் போன்று நேரடியாக புதுச்சேரிக்கும் இந்த நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

இதைத்தவிர மத்திய விற்பனை வரி, கலால் வரியில் இருந்து ஒரு குறிப்பிட்ட வருவாயை புதுச்சேரிக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம்:

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 100 ஏக்கர் நிலம் அளிக்குமாறு தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவக்கம் செய்ய ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் இருந்து ரூ.200 கோடி பெறுவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு மத்திய அரசிடகிருந்து நிதியுதவி கிடைக்கும். இதனால் புதுச்சேரி விமான நிலையத்தில் பெரிய விமானங்களும் வந்து செல்லும் வகையில் வசதி செய்யப்படும்.

கடந்த ஆண்டு நிதி ஒதுகீடு ரூ.1750 கோடி. அந்தத் தொகையில் புதுச்செரி அரசு 75 % அளவில்தான் செலவு செய்துள்ளது. அதனால் இந்த ஆண்டு பட்ஜட் ஒதுக்கீடு ரூ.1500 கோடியாகத்தான் கொடுக்க முடியும் என்று மத்திய திட்டத்துறை அதிகாரிகள் கூறினர். இருப்பினும் நானும் முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் முயற்சி எடுத்து புதுச்சேரியில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதற்காக நான் திட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் புதுச்சேரிக்காக தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். அதில் திட்டத்துறை அதிகாரிகள் கலந்து கோண்டனர். அதன் பிறகு புதுச்சேரியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டுக்கு நிதி ஒருதுக்கீடு ரூ.2250 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 29% அதிகம். இதை 8 மாதத்திற்குள் செலவு செய்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் வைத்திலிங்கத்திடம் கூறியுள்ளேன்" என்று கூறினார்.

புதுச்சேரி சட்டசபை 3ஆம் தேதி கூடுகிறது



புதுச்சேரி சட்டசபை வருகிற 3ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. புதியதுணைநிலை ஆளுநராகப் பதவியேற்கும் திரு இக்பால் சிங் அவர்களின் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. 5ஆம் தேதி நியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு வெ.வைத்திலிங்கம் அவர்கள் 2009-10 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்கிறர்.

புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக திரு இக்பால் சிங் 27ஆம் தேதி பதவியேற்பு


புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக பஞ்ஜாப் மாநிலத்தைச் சார்ந்த திரு இக்பால் சிங் 27ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த திரு கோவிந்சிங் குர்ஜாரின் திடீர் மறைவையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் பதவி மார்ச் மாதம் 2009 முதல் காலியாக இருந்துவந்தது. தமிழக ஆளுநனர் திரு சுர்ஜித்சிங் பர்னாலா புதுவை மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்த நிலையில் மேதகு குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டில் அவர்கள் திரு இக்பால் சிங் அவர்களை புதுச்சேரியின் புதிய ஆளுநராக நியமித்து இம்மாதம் 18ஆம் தேதி இரவு 08.45 மணியளவில் உத்தரவு பிரப்பித்தார். இதனையடுத்து, திரு இக்பால் சிங் அவர்கள் 27ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார்.

இவ்விழவில், மத்திய திட்டம், பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சார துறை இணையமைச்சர் திரு V. நாரயண்சாமி, முதலமைச்சர் திரு.வெ. வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.