Thursday, July 30, 2009
திருவள்ளுவர் சிலை திறக்க மீண்டும் எதிர்ப்பு
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட்டு 9 ஆம் தேதி பெங்களூரில் பந்த் நடத்தப்படும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை பெங்களூரில் நடைபெற்றது. கன்னட சலுவாளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகரஜ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கன்னட சேனை, கர்நாடக ரக்ஷணாவேதிகே மற்றும் கன்னட வேதிகே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியிருப்பதாவது, " பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிப்பு தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி பெங்களூர் மற்ரும் சாம்ராஜ் நகர் ஆகிய நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கும்படியோ, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை நிறுவுங்கள் என்றோ தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
ஆனால் எடியூரப்பா தானாகவே முன்வந்து திருவள்ளுவர் சிலையைத் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியில் மிகப்பெரியத் திட்டம் உள்ளது. சர்வஞர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு நிறுவப்பட்டால் காவிரிப் பிரச்சனை ஏற்படும்போது அச்சிலையைத் தமிழர்கள் அடித்து உடைக்கலாம், கல்வீசித் தாக்கலாம். அவ்வாறு ஏற்பட்டால் அது சர்வக்ஞருக்கு அவமதிப்பு ஏற்படுத்துவது ஆகும். அதற்கு நாம் ஏன் அவகாசமளிக்க வேண்டும்? சர்வக்ஞர் சிலையை நிறுவ அரசு விரும்பினால் பெங்களூரில் விதானசௌதா முன்னால் நிறுவட்டுமே?" என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது.
பிரபாகர் ரெட்டி (கன்னட வேதிக தலைவர்): சந்தனக் கடத்தல் வீரப்பனால் மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டிருந்தபோது, அவரை விடுவிக்க வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் என்பதாகும். இப்போது திருவள்ளுவர் சிலையைத் திறப்பதன்மூலம் வீரப்பன் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முற்பட்டுள்ளது. இது துரதிருஷ்டவசமானது. திருவள்ளுவர் சிலையைத் திறக்க ஆர்வம் காட்டும் தமிழ் அமைப்புகள் அனைத்தும் வீரப்பனுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான்" என்று அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வீர உரை முழங்கியுள்ளார்.
சிவராமே கௌடா (கர்நாடக ரக்ஷணா வேதிக) : பெங்களூரில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி தேர்தலில் அவர்களது வாக்குகளை பெறும் நோக்கத்தோடே அரசு இப்போது திருவள்ளுவர் சிலையைத் திறக்க முன்வந்துள்ளது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதால் தமிழர்கள், கன்னடர்களிடையே உள்ள உறவு மேலும் வலுப்படும் என்று முதல்வர் எடியூரப்ப தெரிவித்திருப்பது கேளிக்குரியது. ஒகேனக்கல் பிரச்சனை, கன்னடத்துக்கு செம்மொழி வழங்குவதை எதிர்த்து உள்ள வழக்கு ஆகியவை இருக்கும்போது இது எப்படி சாத்தியமாகும்" என்று இவரும் தன் பங்கிற்கு மூளையைக் கசக்கியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment