Saturday, July 25, 2009

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து : மத்திய அமைச்சர் நாராயணசாமி தகவல்


மத்திய திட்டம், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திரு V. நாராயணசாமி இன்று சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தியிடமும் இதை வலியுறுத்தியுள்ளோம். பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியகாந்தி உறுதி அளித்துள்ளார்.

கடல் சீற்றம், வறட்சி, போன்றவை ஏற்படும்போது மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நேரடியாக நிதியுதவி அளிக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் இந்த நிதியுதவி கிடப்பதில் சிக்கல் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம்தான் ஆய்வு செய்து புதுச்சேரிக்கு நிதியுதவி அளிக்கிறது. இதையும் மாற்றி மற்ற மாநிலங்ளுக்குக் கொடுப்பதைப் போன்று நேரடியாக புதுச்சேரிக்கும் இந்த நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

இதைத்தவிர மத்திய விற்பனை வரி, கலால் வரியில் இருந்து ஒரு குறிப்பிட்ட வருவாயை புதுச்சேரிக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம்:

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 100 ஏக்கர் நிலம் அளிக்குமாறு தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவக்கம் செய்ய ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் இருந்து ரூ.200 கோடி பெறுவதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு மத்திய அரசிடகிருந்து நிதியுதவி கிடைக்கும். இதனால் புதுச்சேரி விமான நிலையத்தில் பெரிய விமானங்களும் வந்து செல்லும் வகையில் வசதி செய்யப்படும்.

கடந்த ஆண்டு நிதி ஒதுகீடு ரூ.1750 கோடி. அந்தத் தொகையில் புதுச்செரி அரசு 75 % அளவில்தான் செலவு செய்துள்ளது. அதனால் இந்த ஆண்டு பட்ஜட் ஒதுக்கீடு ரூ.1500 கோடியாகத்தான் கொடுக்க முடியும் என்று மத்திய திட்டத்துறை அதிகாரிகள் கூறினர். இருப்பினும் நானும் முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் முயற்சி எடுத்து புதுச்சேரியில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதற்காக நான் திட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் புதுச்சேரிக்காக தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். அதில் திட்டத்துறை அதிகாரிகள் கலந்து கோண்டனர். அதன் பிறகு புதுச்சேரியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டுக்கு நிதி ஒருதுக்கீடு ரூ.2250 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 29% அதிகம். இதை 8 மாதத்திற்குள் செலவு செய்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் வைத்திலிங்கத்திடம் கூறியுள்ளேன்" என்று கூறினார்.

No comments:

Post a Comment