Friday, November 25, 2011

அறியப்படாத புதுச்சேரி-2




பிரெஞ்சுத் துப்பாக்கியும் வாஞ்சிநாதனும் 

....அது இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வசமும்; புதுச்சேரி, பிரெஞ்சு ஆட்சியாளர்களின்கீழும் இருந்த காலம்.


1911 ஜூன் 17ஆம் தேதி - இலண்டனில் ஐந்தாம் ஜார்ஜின் முடிசூட்டு விழா நடந்து கொண்டிருக்கிறது.

இங்கே.... தமிழகத்தில், திருநெல்வேலி கலெக்டரான ராபர்ட் வில்லியம் டி எஸ்டிகோர் ஆஷ் தனது காதல் மனைவியுடன் கொடைக்கானல் போக மணியாச்சி இரயில் நிலையத்திற்கு வருகிறான். ஆறு மாதங்களாக ஆஷின் நடமாட்டத்தைக் கவனித்து வந்த அந்த இளைஞன், ஆஷைப் பின்தொடர்ந்து மணியாச்சி இரயில் நிலையத்திற்கு வந்தான். இரயில் பிளாட்பாரத்தில் வந்து நிற்கிறது. பகல் பொழுது 11 மணி. வேகமாக இரயில் பெட்டிக்குள் நுழைந்த அந்த இளைஞன் ஆஷைச் சுட்டுக் கொன்றான். ஆஷ் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்ட அந்த இளைஞன் பிளாட்பாரத்தில் இறங்கி ஓடுகிறான்... போலீசார் துரத்துகிறார்கள்... பிளாட்பாரத்தின் முடிவில் இருக்கும் கழிப்பறைக்குள் புகுந்து, கையில் வைத்திருந்த ஆஷைச் சுட்ட அதே கைத்துப்பாக்கியால் தன் வாயில் வைத்துச் சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைகிறான் அந்த இளைஞன்.

ஆஷைச் சுட்டுக் கொன்றுவிட்டு வீரமரணம் அடைந்த அந்த இளைஞன் வாஞ்சிநாதன் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்தத் துப்பாக்கி?


பிரெஞ்சு நாட்டில் செய்யப்பட்ட 'லா எதியென்' மார்க்கு பிரவுனிங் என்கிற ஐந்து குண்டு சுழல் கைத்துப்பாக்கி; எண்.250.

வாஞ்சிநாதன் கையில் பிரெஞ்சு தேசத்துத் துப்பாக்கி…?!!

பாரிஸ்டர் படிப்புக்காக இலண்டன் சென்ற  .வே.சு. ஐயர், ‘கர்ஸான் வைலி என்கிற ஆங்கில அதிகாரியைக் கொன்ற வழக்கில் தலைமறைவாகி, வீர விக்கிரம சிங் என்கிற பெயரில் தாடியுடன் சீக்கியர் போலவும், கைரோவில் ஐந்து வேளையும் தொழுகை செய்யும் அரேபியர் போலவும் நடித்து, தென் அமெரிக்கவிலுள்ள பிரேசில் நாட்டிற்கு போவதாக போக்குக் காட்டிவிட்டு, துருக்கி வழியாக கொழும்பு வந்தார். பின்னர், அங்கிருந்து 1910 அக்டோபர் மாதம் புதுச்சேரிக்கு வந்தார்பாரதியைப் போல புதுச்சேரி ஈசுவரன் தருமராஜா கோவில் வீதி அவருக்கும் அடைக்கலம் தந்தது.

ஆஷின் கொடுங்கோன்மைக்கு முடிவுகட்ட புரட்சி இயக்கத்தைச் சார்ந்த பலரும் முடிவு செய்திருந்த நேரமது. "கலெக்டர் ஆஷின் தூண்டுதலால் சிறையிலும் எனக்குப் பல தொல்லைகள் நேரிடுகின்றன. ஆஷின் இந்த அக்கிரமங்களுக்கு முடிவில்லையா?" என்று கோவைச் சிறையில் தன்னைக் காணவந்த குடும்ப நண்பரான பரலி சு. நெல்லையப்பரிடம் ..சி. துயருற்ற செய்தியும் தமிழகம் முழுவதும் பரவியிருந்த சமயமும்கூட அது.

விபின் சந்திர பாலரால் ஈர்க்கப்பட்ட தென்னாட்டுப் புரட்சிவாதி நீலகண்ட பிரம்மச்சாரியின் சீடரான வாஞ்சிநாதன், நீலகண்டனைப் பார்க்க 1910 பிற்பகுதியில் புதுச்சேரிக்கு வந்தான். அப்போது அவர் ஊரில் இல்லை. ஒரு வார காலம் புதுச்சேரியில் தங்கியிருந்த வாஞ்சிநாதனுக்கு வ.வே.சு.ஐயரின் தொடர்பு கிடைக்கிறது. ஆஷைத் தீர்த்துக்கட்ட இவனே சரியானவன் என்று முடிவெடுத்து வாஞ்சிநாதனைத் தனது அணியில் சேர்த்துக்கொண்டார் .வே.சு ஐயர்வாஞ்சிநாதன் தனது சொந்த ஊருக்குத் திருப்பிச் சென்று, மீண்டும் 1910 டிசம்பரில் புதுச்சேரிக்கு வந்தான். ஐயர், தனது நண்பர்களான நாகசாமி, கண்ணுப்  பிள்ளை என்கிற முத்துக்குமாரசாமிப் பிள்ளை ஆகியோர் மூலம் வாஞ்சிநாதனுக்கு புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் இன்னும் பல போதனைப் பயிற்சிகளையும் அளித்தார்.

இதில், கண்ணுப்பிள்ளை புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் மணக்குப்பம் கிராமத்தைச் சார்ந்தவர். இவர், புதுச்சேரியிலேயே படித்துப் பட்டம் பெற்று, பிரெஞ்சி அரசுப் பள்ளி ஒன்றில் தமிழாராசிரியராகப் பணியாற்றியவர். பிற்காலத்தில் இந்திய தேசிய விடுதலைக்கும் பிரெஞ்சிந்திய விடுதலைக்கும், பிரெஞ்சிந்தியத் தொழிலாளர் விடுதலைக்கும் இடையராது உழைத்து 1934இல், தமது 63வது வயதில் காலமானார்.

நாகசாமியோ பாரதிக்கு உதவ எட்டயபுரத்து நண்பரால் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். 1910 ஆம் ஆண்டு பிற்பகுதியில் .வே..ஐயரின் வலதுகரமாக விளங்கி, 'தர்மாலயம்' என்கிற நூலகத்தையும், 'தர்மம்' என்கிற இலவசப் பத்திரிகையும் நடத்தி இளைஞர்களை புரட்சி இயக்கத்துக்கு இழுக்க உதவினார். ஆயுட்காலம் முழுவது புதுச்சேரியிலேயே வாழ்ந்து தனது 82வது வயதில் நெல்லித்தோப்பு என்கிற ஊரில் ஒரு குடிசையில் காலமானார்.

இந்த இரண்டு பேருமே பேச்சுப் பயிற்சி, தேகப் பயிற்சி, மனவளப் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி போன்றவைகளை அளிப்பதில் தேர்ந்தவர்கள்.



புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் வாஞ்சிநாதனுக்கு பயிற்சி அளித்த குழுவினர். கண்ணுப்பிள்ளை (இடமிருந்து 2ஆவது),முத்துக்குமாரசாமிப்பிள்ளை(இடமிருந்து 3ஆவது). கீழே உட்கார்ந்திருப்பது வாஞ்சிநாதன்

துப்பாக்கி சுடும் பயிற்சி உட்பட ஏனைய பயிற்சிகளையும் அளித்த பின்னர், வாஞ்சிநாதனிடம் பிரெஞ்சு நாட்டில் செய்யப்பட்ட 'லா எதியென்' மார்க்கு பிரவுனிங் - ஐந்து குண்டு சுழல் கைத்துப்பாக்கி; எண்.250க் கொடுத்து, ஆஷைக் கொல்லும் காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற ரத்தத் திலகமிட்டு அனுப்பிவைத்தவர்கள் நாகசாமியும் புதுச்சேரி கண்ணுப்பிள்ளையுமே ஆவர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காட்டிலாக்காவில் வேலை பார்த்துவந்த வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிச் சுட பயிற்சி கொடுத்ததும், அந்தக் கைத்துப்பாக்கியைக் கொடுத்து அனுப்பிய புதுச்சேரி விடுதலை வீரர்களுக்கான பயிற்சிக் களம் மட்டுமல்ல அரசியல், ஆன்மீக அருளாளர்களின் அடைக்கல பூமியும் கூட. 1910இல்தான் புதுச்சேரி அடைக்கல பூமியாகவும் அவதாரம் கொள்கிறது.

இது குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்...

Source: ரா. அ.பத்மநாபன். 

No comments:

Post a Comment