Wednesday, August 5, 2009

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா : கலைஞர்-எடியூரப்பா சந்திப்பு




கடந்த திங்கட்கிழமை பெங்களூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கு அனைத்துக் கட்ட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள், கன்னட சங்கத்தலைவர்கள் ஒருமித்த ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை செவ்வாய்க்கிழமை காலை பெங்களூர்த் தமிழ் சங்க நிர்வாகிகள் சந்தித்து அவருக்கு சந்தன மாலை மற்றும் மைசூர் தலைபாகை அணிவித்து நன்றி தெரிவித்தனர். பிற்பகலில் திருவள்ளுவர் சிலை திறப்பு தொடர்பாக 13 தமிழ் அமைப்புகள் அடங்கிய கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் எடியூரப்ப ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் எடியூரப்பாவிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தமிழ் அமைப்புகளின் பாராட்டினை ஏற்றுக் கொண்ட எடியூரப்பா திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யும்படி தமிழ் அமைப்பின் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எடியூரப்பா பேசுகையில், " கர்நாடகத்தின் வளர்ச்சி மற்றும் பெங்களூர் நகர வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மகத்தானது. அரசியல் பக்குவ குறைவு காரணமாக 18 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடியாமல் போனது. இப்போது காலம் கூடிவந்துள்ளது. திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டியதன் அவசியம் கருதி நான் அதில் கவனம் செலுத்தியதால் எல்லோரது ஆதரவுடன் இப்போது சிலை திறக்கப்படவுள்ளது. சிலை திறக்கப்படுவதால் தமிழர்-கன்னடர் இடையே நல்லிணக்கம் ஏற்படும். இதற்குமுன் திருவள்ளுவர் சிலையை பிரச்சனையாக வைத்துக் கொண்டு இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவை கெடுக்க முயன்றனர்" என்றார்.

தமிழ்ச் சங்க செயளர் கோ.தாமோதரன் கூறும் போது, " அனைத்து அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், கன்னட போராட்டக்காரர்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்று 18 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையைத் திறக்க முதல்வர் எடியூரப்பா எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் பாராட்டத் தக்கது. நில, நீர், மொழி பிரச்சனைகளில் நாங்கள் கர்நாடகத்துடனேயே இருப்போம்" என்றார்.

தமிழ் சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் பேசுகையில், " மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகளில் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு அளிப்போம். சிலையைத் திறக்க சில கன்னட அமைப்புகள் இதிர்ப்பு தெரிவித்துபந்த் நடத்துவதாக அறிவித்துள்ளன. திருவள்ளுவர் மதம், மொழி, மாநிலங்களுக்கு அப்பாற்பட்டவர். திர்ர்வள்ளுவர் சிலையைத் திறக்க 18 ஆண்டுகளாக போராடினோம். எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்த அரசிடம் திருவள்ளுவர் சிலை திறப்பு கோரிக்கையை பலமாக வலியுறுத்தினோம். அதை அரசு நிறைவேற்றியுள்ளது பாராட்டத்தக்கது" என்றார்.

கலைஞர்-எடியூரப்பா சந்திப்பு:
பெங்களூரி ஓய்வெடுத்துவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று (செவ்வாய்கிழமை) சந்தித்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி திறக்கப்படவுள்ள திருவள்ளுவர் சிலை விழா ஏற்பாடுகள் குறித்தும் சென்னையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி திறக்கப்படவுள்ள கன்னட கவிஞர் சைவக்ஞர் சிலை திறப்பு விழா குறித்தும் ஆலோசனை நடத்தினார். பின்னர் 9ஆம் தேதி பெங்களூரில் திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலை விழாவிற்காக கர்நாடக அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழை தமிழக முதல்வர் கருணநிதியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்ப வழங்கி முறைப்படி வரவேற்றார்.

அழைப்பிதழ்:

வண்ணமயமான இந்த அழைப்பிதழ், மொத்தம் 4 பக்கங்கள் கொண்டது. முதல் பக்கத்தின் மேல் பகுதியில் கர்நாடக அரசின் சின்னமும், அதன் கீழே பிரம்மாண்டமாக அமர்ந்த திருவள்ளுவரின் புகைப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பக்கத்தில்(இடதுபுறம்) முதல்வர் எடியூரப்பாவின் புகைப்படம் மேலே அச்சடிக்கப்பட்டுள்ளது. கீழே கன்னடத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறும் நாள், கிழமை போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. வலதுபுறத்தில்(3ஆம் பக்கம்) தமிழக முதல்வர் கருணநிதியின் புகைப்படம் மேலேயும், கீழே நிகழ்ச்சி குறித்த விவரங்கள் தமிழிலும் அச்சடிக்கப்படுள்ளன. கடைசி பக்கத்தில் திருவள்ளுவரின் சிறிய படம் இடம்பெற்றுள்ளது. திருவள்ளுவரின் படத்தின்கீழே "திருவள்ளுவர் 2040 வருடங்களுக்கு முன்பு பிறந்தவர். மனிதன் மனிதனாக வழ்வதற்கு தேவையான நெறிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய பிரிவுகளாக பிரித்து, எந்த தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடாமல் 1330 பாடல்களை இயற்றி, உலகுக்கு தேவையான நீதி நெறிகளை கூறியுள்ளார். தன்னுடைய பாடல்களில் எந்த ஒரு நாட்டைப் பற்றியே, ஒரு தனிமனிதனைப் பற்றியோ பெயரை குறிப்பிடாமல் சர்வ மதத்தவரும் பாராட்டும் வகையில் வாழ்ந்த ஒரு மகான் திருவள்ளுவர்" என்று கன்னடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்பு:

கர்நாடக சட்டப்பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் 13ஆம் தேதி நடைபெறும் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் கர்நாடகாவின் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு அமைச்சர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர். அதேபோல் பெங்களூரில் 9-ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment