Thursday, February 28, 2013

அறியப்படாத புதுச்சேரி – 3




இந்திய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புதுச்சேரி



இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு இரவீந்திரநாத் தாகூரின் வாயிலாக மேற்கு வங்கம் வித்திடுவதற்கு முன்னதாகவே அந்தப் பணியை புதுச்சேரி செய்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா ?

1913 ஆம் ஆண்டு, ”கீதாஞ்சலிநூலுக்காக நோபல் பரிசு பெற்றதன் மூலம் வங்கக்கவி இரவீந்திரநாத் தாகூரை, இந்திய இலக்கியத்தின் அடையாளச் சின்னமாக உலகம் கவனிக்கத் தொடங்கியது. அதே நேரத்தில், கீதாஞ்சலிக்கு நோபல் பரிசா என்று அங்கலாய்த்தவர்கள் பலர் உண்டு. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நோபல் பரிசு கொடுக்கப்பட்டது தாகூரின் மூலப்படைப்பிற்கு அல்ல. ஆங்கில மொழிபெயர்ப்புக்கு; அதுவும் தனிச்சுற்றாய் வெளிவந்த  மொழிபெயர்ப்புக்கு.

கீதாஞ்சலி வெளிவந்த சூழலையும் பரிசு பெற்ற பின்னணியையும் பின்னர் அது பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கால இடைவெளியையும் விளங்கிக்கொண்டால் மட்டுமே புதுச்சேரியின் பங்களிப்பைப் புரிந்துகொள்ள முடியும்.
தாகூரின் துணைவியார் 1902இல் காலமானார். தாகூரை சரியாகக் கவனித்துக்கொள்ள ஆளில்லை. தனிமை சூழ்ந்திருந்த அவரது வாழ்வில் அடுத்த ஆண்டே மற்றோர் சோகம் சூழ்ந்தது. அது, 1903 இல் நிகழ்ந்த அவரது இரண்டாவது மகள் மரணம். 1907இல் தாகூரின் கடைசி மகன் மரணம். இதற்கு இடையில் 1905இல் வங்கப்பிரிவினைகுடும்பச் சூழலும் நாட்டுச் சூழலும் அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்தச் சூழ்நிலையில் துன்பம், மரணம், இவைகளில் இருந்து மீளும் வழிமுறைகள் போன்றவற்றையெல்லாம் குறித்து அவரது மனம் சிந்திக்கத் தொடங்குகிறது. அந்தத் துயரகாலத்தில், தனது இதய தேவதையை நோக்கி வேண்டுகிறார். ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையத் துடிக்கிறது. மரணம் ஒரு நள்ளிரவில் வாசலில் வந்து நிற்கும்; தாகூர் வெளியே வந்து வந்தனம் சொல்வார். அவர் கை கூப்பித் தொழ மரணம் திரும்பிச் செல்லும். அதுவேகீதாஞ்சலிஎன்னும் இலக்கியமாயிற்று. 1910இல் எழுதப்பட்ட இந்த கீதாஞ்சலி வசன நடையில் அமைந்த ஒன்றல்ல. அது ஒரு இசைப்பாடல். அதன் பெயரே அதனை விளக்கும். அதுமட்டுமல்ல, இந்த இசைப்பாடல் அப்போது மேலை நாடுகளில் மட்டுமல்ல இந்தியர்களாலும் பெரிதும் கவரப்படவில்லை.

1902-1912க்கு இடைப்பட்ட காலத்தில் உடல் நலம் குன்றியிருந்த தாகூர், மருத்துவத்திற்காக ஐரோப்பா செல்ல திட்டமிட்டிருந்தார். பல்வேறு காரணங்களால் முதல் பயணம் தடைபட்டது. அந்த நேரத்தில், தனது பண்ணை வீட்டில் அமர்ந்து கொண்டு தனது கவிதைகளில் சிலவற்றை அங்கிலத்தில் மொழிபெயர்த்தார் தாகூர்.   தமது மொழிபெயர்ப்பில் 103 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, அத்தொகுப்பிற்கும்கீதாஞ்சலிஎன்று பெயரிட்டார் தாகூர். அதனை இசைப் பாட்டு (Musical Poem) என்றே அவர் குறிப்பிட்டார். தாகூரது ஆங்கில ஆக்கம்  யாப்புச் சுத்தமாக இல்லாமல், வசனமும் கவிதையும் இணைந்த ஒரு புதுவடிவமாய், அதாவது வசன கவிதையாய் அமைந்து போனது ஒரு தற்செயலான நிகழ்வு.   

தாகூர் இலண்டன் புறப்பட்டார். வில்லியம் ரோத்தன்டெய்ன் என்கிற இங்கிலாந்து ஓவியர் கீதாஞ்சலி கவிதை வாசிப்பிற்கு ஏற்பாடு செய்தார் (1912, ஜூலை 7ஆம் தேதி). அதை வாசித்தவர் புகழின்  உச்சியைத் தொட்ட டபிள்யூ.பி.யீட்ஸ். அதைக் கேட்டவர்களில் ஒருவர், உலகப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்ரா பவுண்ட். 1912, ஜூலை 10ஆம் தேதி மீண்டும் ஒர் இலக்கியச் சந்திப்பு இலண்டனில் நடைபெற்றது. இலண்டன் இந்தியா சொசைட்டி, 1912ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கீதாஞ்சலியைத் தனிச்சுற்றுக்கான பதிப்பாக வெளியிட்டது. இந்தப் பிரதிதான், 1913 அக்டோபர் மாதம் நோபல்பரிசுக் குழுவினரின் கைக்குப் போனது. 1913 நவம்பரில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இரவீந்திரநாத் தாகூருக்கு அறிவிக்கப்பட்டது.


ஆனால், தாகூரின் வசன கவிதை முயற்சிக்கு முன்னதாகவே பாரதியின்காற்றுமுதலான வசன கவிதை முயற்சி 1911-15 இல் தொடங்கிவிட்டது. வங்கமொழி கீதாஞ்சலி எடுத்த எடுப்பிலேயே எந்தவிதமான தாக்கத்தையும் இந்தியாவில் விளைவிக்கவில்லை. கீதாஞ்சலி பெற்ற நோபல் பரிசும், அந்த நூலுக்கு டபிள்யூ.பி.யீட்ஸ் எழுதிய முன்னுரையும் இந்தியர்களுக்கு கீதாஞ்சலி மீது ஈடுபாடு ஏற்படக் காரணமாக அமைந்தது. அதன் பின்னர், 1913இல் தெலுங்கிலும், 1917இல் மராத்தியிலும், 1918இல் குஜராத்தியிலும், 1924இல் இந்தியிலும், 1937இல் மலையாளத்திலும், 1942இல் சிந்தி மொழியிலும், 1943இல் உருது மொழியிலும், 1944இல் கன்னடத்திலும், 1945இல் தமிழிலும், 1948இல் பஞ்சாபியிலும் கீதாஞ்சலி மொழிபெயர்க்கப்பட்டது.
     இதில் கவனிக்க வேண்டியது தாகூரின் வங்கமொழிகீதாஞ்சலிஎழுதப்பட்டது 1910இல். தாகூர் தமது கவிதைகளை மொழிபெயர்த்து அதற்கும்கீதாஞ்சலிஎனப் பெயரிட்டது, 1912இல். இந்தத் தொகுப்பு நோபல் பரிசு பெற்று உலகப் புகழ் அடைந்தது, 1913 நவம்பரில்தாகூரின் வங்கமொழி கீதாஞ்சலி சந்தப்பாட்டு; வசன கவிதை இல்லை என்பதை முன்னமே பார்த்தோம். ஆனால், பாரதியின் காற்று முதலான வசன கவிதை முயற்சி 1911லேயே தொடங்கிவிடுகிறது. பாரதி-தாகூர் இருவரின் புதுக்கவிதை ஆக்கங்களில் உள்ள கால வித்தியாசம்  இங்கு கவனத்திற்குரியது. (தாகூருக்கு முந்தியே பாரதி தனது இலக்கிய வடிவச் சோதனையைத் தொடங்கிவிட்டார் என்பதற்கு பல்வேறு ஆய்வாளர்களின் முடிவுகள் உள்ளன. என்றாலும், அவையெல்லாம் இங்கு தவிர்க்கப்படிருப்பதற்கு காரணம், இந்த கட்டுரை ஓர் ஆய்வுக் கட்டுரையாக் போய்விடும் என்பதற்காக) 
எனவே, இந்திய இலக்கியத்தில் புதுக்கவிதைஎன்கிற புது இலக்கிய வடிவத்தினை முதன்முதலில் தொடங்கிவைத்தவர் நம் பாரதிதான் என்பதை நாம் தைரியமாகத் துணிந்து சொல்லலாம். பாரதி தனது காற்று முதலான  புதுக்கவிதை முயற்சியை புதுச்சேரியில் தங்கியிருந்தபோதுதான் மேற்கொண்டார்.
ஆக, இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு பாரதியின் வாயிலாக புதுச்சேரி தனது பங்களிப்பை நல்கியிருக்கிறது என்பது எவ்வளவு பெருமைக்குரிய செய்தி !
…………. இன்னும் அறிவோம் புதுச்சேரியை

No comments:

Post a Comment