Friday, July 31, 2009

சிறுநீரகக் கல்லுடைப்பு கருவி: பொதுமக்களுக்கு நாளை அர்ப்பணிப்பு


புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ரூ.2.25 கோடி செலவில் அதிவலை சிறுநீரக கல்லுடைப்பு கருவி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதனை மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் தலைமையில் முதலமைச்சர் வெ.வைத்திலிங்கம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் இ.வல்சராஜ் ஆகியோர் முன்னிலையில் புதிய கருவியை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்ணிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சிவக்குமார், நகராட்சி தலைவி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த கருவியைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையில் நோயாளியின் உடலில் இயற்கைத் துளைகள் மூலமோ, வேறு துளையிட்டோ எந்த கருவியையும் உள்நோக்கி செலுத்தப்படுவதில்லை. நோயாளியின் உடலில் எந்தக் காயமும் ஏற்படுத்தப்படுவதில்லை. நோயாளியின் உடலுக்கு எந்தவகை பாதிப்பும் இன்றி வெளியிலிருந்து உருவாக்கப்படும் அதிவலைகள் மூலம் சிறுநீரக கற்கள் உடைக்கப்படுகின்றன. மயக்க மருந்துகள் கொடுக்கப்படுவதும் இல்லை.

மேலும் புறநோயாளியாக இருந்து ஒன்று அல்லது 2 மணி நேரத்திற்குள் சிகிச்சை பெறலாம், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மறுநாளிலிருந்தே தனது வழக்கமான பணிகளைச் செய்யலாம். இந்த முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 நோயாளிகள் சிகிச்சை பெறமுடியும்.

No comments:

Post a Comment