Friday, November 25, 2011

அறியப்படாத புதுச்சேரி-2




பிரெஞ்சுத் துப்பாக்கியும் வாஞ்சிநாதனும் 

....அது இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வசமும்; புதுச்சேரி, பிரெஞ்சு ஆட்சியாளர்களின்கீழும் இருந்த காலம்.


1911 ஜூன் 17ஆம் தேதி - இலண்டனில் ஐந்தாம் ஜார்ஜின் முடிசூட்டு விழா நடந்து கொண்டிருக்கிறது.

இங்கே.... தமிழகத்தில், திருநெல்வேலி கலெக்டரான ராபர்ட் வில்லியம் டி எஸ்டிகோர் ஆஷ் தனது காதல் மனைவியுடன் கொடைக்கானல் போக மணியாச்சி இரயில் நிலையத்திற்கு வருகிறான். ஆறு மாதங்களாக ஆஷின் நடமாட்டத்தைக் கவனித்து வந்த அந்த இளைஞன், ஆஷைப் பின்தொடர்ந்து மணியாச்சி இரயில் நிலையத்திற்கு வந்தான். இரயில் பிளாட்பாரத்தில் வந்து நிற்கிறது. பகல் பொழுது 11 மணி. வேகமாக இரயில் பெட்டிக்குள் நுழைந்த அந்த இளைஞன் ஆஷைச் சுட்டுக் கொன்றான். ஆஷ் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்ட அந்த இளைஞன் பிளாட்பாரத்தில் இறங்கி ஓடுகிறான்... போலீசார் துரத்துகிறார்கள்... பிளாட்பாரத்தின் முடிவில் இருக்கும் கழிப்பறைக்குள் புகுந்து, கையில் வைத்திருந்த ஆஷைச் சுட்ட அதே கைத்துப்பாக்கியால் தன் வாயில் வைத்துச் சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைகிறான் அந்த இளைஞன்.

ஆஷைச் சுட்டுக் கொன்றுவிட்டு வீரமரணம் அடைந்த அந்த இளைஞன் வாஞ்சிநாதன் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்தத் துப்பாக்கி?


பிரெஞ்சு நாட்டில் செய்யப்பட்ட 'லா எதியென்' மார்க்கு பிரவுனிங் என்கிற ஐந்து குண்டு சுழல் கைத்துப்பாக்கி; எண்.250.

வாஞ்சிநாதன் கையில் பிரெஞ்சு தேசத்துத் துப்பாக்கி…?!!

பாரிஸ்டர் படிப்புக்காக இலண்டன் சென்ற  .வே.சு. ஐயர், ‘கர்ஸான் வைலி என்கிற ஆங்கில அதிகாரியைக் கொன்ற வழக்கில் தலைமறைவாகி, வீர விக்கிரம சிங் என்கிற பெயரில் தாடியுடன் சீக்கியர் போலவும், கைரோவில் ஐந்து வேளையும் தொழுகை செய்யும் அரேபியர் போலவும் நடித்து, தென் அமெரிக்கவிலுள்ள பிரேசில் நாட்டிற்கு போவதாக போக்குக் காட்டிவிட்டு, துருக்கி வழியாக கொழும்பு வந்தார். பின்னர், அங்கிருந்து 1910 அக்டோபர் மாதம் புதுச்சேரிக்கு வந்தார்பாரதியைப் போல புதுச்சேரி ஈசுவரன் தருமராஜா கோவில் வீதி அவருக்கும் அடைக்கலம் தந்தது.

ஆஷின் கொடுங்கோன்மைக்கு முடிவுகட்ட புரட்சி இயக்கத்தைச் சார்ந்த பலரும் முடிவு செய்திருந்த நேரமது. "கலெக்டர் ஆஷின் தூண்டுதலால் சிறையிலும் எனக்குப் பல தொல்லைகள் நேரிடுகின்றன. ஆஷின் இந்த அக்கிரமங்களுக்கு முடிவில்லையா?" என்று கோவைச் சிறையில் தன்னைக் காணவந்த குடும்ப நண்பரான பரலி சு. நெல்லையப்பரிடம் ..சி. துயருற்ற செய்தியும் தமிழகம் முழுவதும் பரவியிருந்த சமயமும்கூட அது.

விபின் சந்திர பாலரால் ஈர்க்கப்பட்ட தென்னாட்டுப் புரட்சிவாதி நீலகண்ட பிரம்மச்சாரியின் சீடரான வாஞ்சிநாதன், நீலகண்டனைப் பார்க்க 1910 பிற்பகுதியில் புதுச்சேரிக்கு வந்தான். அப்போது அவர் ஊரில் இல்லை. ஒரு வார காலம் புதுச்சேரியில் தங்கியிருந்த வாஞ்சிநாதனுக்கு வ.வே.சு.ஐயரின் தொடர்பு கிடைக்கிறது. ஆஷைத் தீர்த்துக்கட்ட இவனே சரியானவன் என்று முடிவெடுத்து வாஞ்சிநாதனைத் தனது அணியில் சேர்த்துக்கொண்டார் .வே.சு ஐயர்வாஞ்சிநாதன் தனது சொந்த ஊருக்குத் திருப்பிச் சென்று, மீண்டும் 1910 டிசம்பரில் புதுச்சேரிக்கு வந்தான். ஐயர், தனது நண்பர்களான நாகசாமி, கண்ணுப்  பிள்ளை என்கிற முத்துக்குமாரசாமிப் பிள்ளை ஆகியோர் மூலம் வாஞ்சிநாதனுக்கு புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் இன்னும் பல போதனைப் பயிற்சிகளையும் அளித்தார்.

இதில், கண்ணுப்பிள்ளை புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் மணக்குப்பம் கிராமத்தைச் சார்ந்தவர். இவர், புதுச்சேரியிலேயே படித்துப் பட்டம் பெற்று, பிரெஞ்சி அரசுப் பள்ளி ஒன்றில் தமிழாராசிரியராகப் பணியாற்றியவர். பிற்காலத்தில் இந்திய தேசிய விடுதலைக்கும் பிரெஞ்சிந்திய விடுதலைக்கும், பிரெஞ்சிந்தியத் தொழிலாளர் விடுதலைக்கும் இடையராது உழைத்து 1934இல், தமது 63வது வயதில் காலமானார்.

நாகசாமியோ பாரதிக்கு உதவ எட்டயபுரத்து நண்பரால் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். 1910 ஆம் ஆண்டு பிற்பகுதியில் .வே..ஐயரின் வலதுகரமாக விளங்கி, 'தர்மாலயம்' என்கிற நூலகத்தையும், 'தர்மம்' என்கிற இலவசப் பத்திரிகையும் நடத்தி இளைஞர்களை புரட்சி இயக்கத்துக்கு இழுக்க உதவினார். ஆயுட்காலம் முழுவது புதுச்சேரியிலேயே வாழ்ந்து தனது 82வது வயதில் நெல்லித்தோப்பு என்கிற ஊரில் ஒரு குடிசையில் காலமானார்.

இந்த இரண்டு பேருமே பேச்சுப் பயிற்சி, தேகப் பயிற்சி, மனவளப் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி போன்றவைகளை அளிப்பதில் தேர்ந்தவர்கள்.



புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் வாஞ்சிநாதனுக்கு பயிற்சி அளித்த குழுவினர். கண்ணுப்பிள்ளை (இடமிருந்து 2ஆவது),முத்துக்குமாரசாமிப்பிள்ளை(இடமிருந்து 3ஆவது). கீழே உட்கார்ந்திருப்பது வாஞ்சிநாதன்

துப்பாக்கி சுடும் பயிற்சி உட்பட ஏனைய பயிற்சிகளையும் அளித்த பின்னர், வாஞ்சிநாதனிடம் பிரெஞ்சு நாட்டில் செய்யப்பட்ட 'லா எதியென்' மார்க்கு பிரவுனிங் - ஐந்து குண்டு சுழல் கைத்துப்பாக்கி; எண்.250க் கொடுத்து, ஆஷைக் கொல்லும் காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற ரத்தத் திலகமிட்டு அனுப்பிவைத்தவர்கள் நாகசாமியும் புதுச்சேரி கண்ணுப்பிள்ளையுமே ஆவர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காட்டிலாக்காவில் வேலை பார்த்துவந்த வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிச் சுட பயிற்சி கொடுத்ததும், அந்தக் கைத்துப்பாக்கியைக் கொடுத்து அனுப்பிய புதுச்சேரி விடுதலை வீரர்களுக்கான பயிற்சிக் களம் மட்டுமல்ல அரசியல், ஆன்மீக அருளாளர்களின் அடைக்கல பூமியும் கூட. 1910இல்தான் புதுச்சேரி அடைக்கல பூமியாகவும் அவதாரம் கொள்கிறது.

இது குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்...

Source: ரா. அ.பத்மநாபன். 

Monday, November 21, 2011

அறியப்படாத புதுச்சேரி

அறியப்படாத புதுச்சேரி-கட்டிடக்கலை 

பிரெஞ்சு பகுதி கட்டிடம் 

தமிழ் பகுதி கட்டிடம் 

   மிகப்பழமையான காலத்திலிருந்தே வேதங்கள் கற்பிக்கப்படும் இடமாக பாகூர் பகுதி விளங்கியதால், "வேதபுரி" என்ற பெயரும் இருந்துள்ளது என ஒரு சாரார் குறிபிடுகின்றனர். (பழம்பெரும் ரோமானிய மற்றும் கிரேக்க அறிஞர்களால் இந்த இடம் "பொதுக்கே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது)சோழர் காலத்தில் இது துறைமுகப் பட்டினமாகச் செழித்தோங்கி "புதுச்சேரி" என அறியப்படலாயிற்று. இதன் மருவல் பெயரே 'பொதுகா' (பொதுசா) என்பதாகும். பிரெஞ்சுகாரர்கள்  இங்குத் தமது வியாபாரத் துறைமுகத்தையும் கோட்டையையும் அமைத்த பின்னர் தமது மொழியில் 'பொந்திச்சேரி என்று அழைத்தனர். இதனை ஆங்கிலேயர்கள் பாண்டிச்சேரி என்று படித்தனர். இப்போது மீண்டும் புதுச்சேரி ஆகியிருக்கிறது.

தமிழகத்தை ஒட்டிய பகுதியாக இருந்தாலும், தனக்கெனத் தனித்த அடையாளங்கள் பலவற்றைத் தன்னகத்தேக் கொண்டிருக்கிறது - புதுச்சேரி. அவைகளில் சில இங்கே "அறியப்படாத புதுச்சேரி'யாக.....

*****


அறியப்படாத புதுச்சேரி  - 1

புதுச்சேரி ஒரு சுவாரசியமான கலப்புக் கலாச்சார வரலாற்றைக் கொண்டது.


1690களின் தொடக்கத்தில் டச்சுக்காரகள் இங்கு வந்தபோது புதுச்சேரி ஒரு மீனவர் வசிப்பிடப்பிடமாக இருந்ததது. புதுச்சேரியின் மேம்பாட்டிற்கான வளர்ச்சித் திட்டத்தையொட்டி, டச்சுக்காரர்கள் ஒரு வரைபடத்தைத் தயார் செய்தனர். நேர் நேரான தெரு அமைப்பைக் கொண்ட நகருக்கான அந்தத் திட்டத்தின்படி உள்ளூர்த் தமிழர்களைப் பெரிய வாய்க்காலின் மேற்குப் பகுதியில் குடியமர்த்த திட்டமிட்டனர். புதுச்சேரி மறுபடி பிரெஞ்சுக்காரகள் வசம் வந்தவுடன் இத்திட்டத்தைப் பின்பற்றி நேர் நேரான சாலைகளை அமைத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் கடற்கரையை ஒட்டியிருந்த அரசு சதுக்கத்தைச் சுற்றி (தற்போதைய பாரதி பூங்காப் பகுதியில்) பிரெஞ்சு நகர் உருவாக்கப்பட்டது. இவ்விடத்தைச் சுற்றிக் கம்பீரமான அரசு கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றை அடுத்து இரு பக்ககங்களிலும் அரசு அலுவலகங்களும் வீடுகளும் கொண்ட விரிவான பகுதிகள் வளரத் தொடங்கின. கடற்கரையை ஒட்டிய சாலையானது, சுங்கச்சாவடி, நீதி மன்றம், மேல் முறையீட்டு மன்றம் போன்ற முக்கிய கட்டிடங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பெரிய வாய்க்கால் - தமிழ்ப் பகுதியையும் பிரெஞ்சுப் பகுதியையும் பிரித்தது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் இரு பாலங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. பிரெஞ்சு அரசில் பணிபுரிந்தோருக்காக நகரின் வடக்குப் பகுதியில் சிறு தமிழ்க் குடியிருப்புக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன எனத் தெரிகிறது.

பிரெஞ்சு நாட்டின் 18ஆம் நூற்றாண்டு நகர்ப்புற உயர்தர மக்கள் வசித்த வீடுகளின் அமைப்பை ஒத்து காணப்படுகின்றன. எனினும், பாரிஸ் நகரில் காணப்படும் வீடுகளின் சாய்வான கூரைகளைப் போலில்லாமல் இங்குக் கூரைகள் சமதளமாக அமைந்துள்ளன. இதற்கு, பலமான கடல் காற்று, மாறுபட்ட தட்பவெப்ப நிலை, உள்ளூர்க் கட்டிடக்கலை வழக்கம் போன்றவை காரணமாக இருக்கலாம். புதுச்சேரியின் வெப்பமான சூழ்நிலையைத்  கருத்தில் கொண்டு அதனைத் தணிக்கும் வகையில் உயரமான கூரை, பெரிய அளவிலான அறைகள், விசாலமான சன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் காற்றை வரவேற்கும் பொருட்டு நேருக்கு நேராக அமைந்துள்ள கதவுகளும் சன்னல்களும் மூடித் திறக்கும்படியான மரப்பட்டைகளையும், பிரம்புப் பின்னல்களையும் கொண்டுள்ளன. இவை காற்றோட்டம் தடைப்படாமல் சூட்டை மட்டும் கட்டுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. தோட்டத்தை ஒட்டிய திறந்தவெளி வராந்தாக்கள் இளைப்பாறுவதற்கு ஏற்ற இடமாக விளங்குகின்றன.

பொதுவாகப் பிரெஞ்சுக்  கட்டிடச் சுவர்கள் இரண்டடி அகலமும் 14 அடி உயரமும் கொண்டவை. இவை, செங்கற்களால் சுண்ணாம்பு கொண்டு அமைக்கப்பட்டவையாக உள்ளன. சுண்ணாம்பைத் துத்திப்பட்டு என்னும் இடத்திலுள்ள சுண்ணாம்புக் கற்களில் இருந்தும், கடல் கிளிஞ்சல்களைச் சுட்டும் தயாரித்துள்ளனர். இத்தகைய சுண்ணாம்பை மணலுடன் கலக்கக் கலவை நிலையங்கள் இருந்துள்ளன. மர வேலைகளுக்கு பர்மா தேக்கு உபயோகிக்கப் பட்டுள்ளது.

தமிழ்ப் பகுதி வீதிகளும் பிரெஞ்சுப் பகுதி வீதிகளும் வேறு வேறான அமைப்புக்களைக் கொண்டவை. பிரெஞ்சுப் பகுதி வீதிகளின் வீடுகள் தனித்தனியாகவும், பெரியதாகவும், உயரமான சுற்றுச்சுவர், திறந்தவெளித் தோட்டம், அலங்காரமான  நுழைவு வாயில், வளைவுகளுடன் கூடிய வராந்தா, உயரமான சன்னல்கள், மரத்தாலான பால்கனிகள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்திருப்பதைக் காணலாம். தமிழ்ப் பகுதித் தெருக்களைப் பொருத்தவரை, முக்கிய அம்சங்களாக விளங்குவது வாயில் தாழ்வாரமும் திண்ணையுமே. இதில், தாழ்வாரம்-தெருவைவிடச் சற்று உயரத்தில் அமைந்த மெல்லிய தூண்களின் மேல் சாய்வான ஓடுவேயப்பட்ட பகுதியாகும். இதை அடுத்து அமைந்திருப்பது திண்ணை - மரத்தூண்கள் மற்றும் உட்கார வசதியான மேடைகளுடன் அமைந்திருக்கும் பகுதியாகும். நடந்து செல்பவர்கள் மற்றும் தேடி வருபவர்களுக்கு நிழலும் உட்கார இடமும் அளிக்கும் இவை விருந்தோம்பலின் முதல் கட்டப் பிரதிபளிப்பு.


வீதியையும் வீட்டையும் இணைக்கும் திண்ணைப் பகுதியிலுள்ள - வேலைப்பாடு மிகுந்த வாசற்கதவைக் கடந்ததும் ஒரு குறுகிய நடைப்பகுதி (ரேழி) வழியே வீட்டின் மையப்பகுதியான முற்றத்தை அடையலாம். முற்றம் பழங்காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்து வரும் ஒரு அமைப்பாகும். வாஸ்து சாத்திரத்தின்படி அனைத்துக் குடியிருப்புக்களும் இத்தகைய திறந்தவெளி அமைப்பைக் கொண்டிருத்தல் வேண்டும். பிரம்ம-ஸ்தானம் என்று அழைக்கப்படும் இந்த இடம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் எனும் ஐந்து இயற்கைக் கூறுகளையும் வீட்டின் மையப்பகுதியுடன் இணைக்க உதவுகிறது. வீடு இயற்கை வெளிச்சத்துடன் காற்றோட்டமான அமைப்புடன் விளங்க இந்த முற்றமே காரணம். மேலும், வீட்டின் பல கொண்டாட்டங்கள் இந்த முற்றத்திலோ அல்லது அதைச் சுற்றியோதான் நடைபெறுவது வழக்கம்.

வீட்டிற்குப் பொதுவான முற்றத்தைச் சுற்றி, பூசை அறை, சமையல் அறை, சாமான் அறை, படுக்கை அறை எனத் தனிப்பட்ட அறைகள் அமைந்திருக்கும். வீட்டின் பின்புறம் தோட்டமும் கிணறும் இருக்கும். மாடு வளர்ப்பவர் வீடுகளில் மாட்டுத் தொழுவம் இருக்கும்.

வசதியான வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முற்றங்களைக் காணலாம். இத்தகைய வீடுகளை இரண்டு கட்டு அல்லது மூன்றுகட்டு வீடு என்று அழைப்பது வழக்கம்.


தொடர்ச்சியான தாழ்வாரங்கள் மற்றும் பிலாஸ்டர், கோர்னேசு, கைப்பிடிச்சுவர் போன்ற பிற அம்சங்களும் இவற்றின் ஒருபடித்தான தன்மையும் தெருவுக்கு ஒரே சீரான அழகை அளிப்பதைக் காண முடியும். தமிழ் வீடுகளில் சமதளக்கூரை, சாய்வான ஓட்டுக்கூரை இரண்டும் கலந்து அமைக்கப்பட்டுள்ளன. இருதளமாக அமைந்த தமிழ் வீடுகளில் கீழ்ப் பகுதி தமிழ்க் கலை அம்சங்களுடனும், மாடிப் பகுதி பிரெஞ்சுக் கலை அம்சங்களுடனும் விளங்குகின்றன


அடுத்தடுத்துள்ள இத்தகைய இரு வேறுபட்ட பாணிகள் ஒன்றை ஒன்று பாதித்ததன் விளைவாக, இங்குள்ள கட்டிடங்கள் இரண்டு கலை அம்சங்களையும் பிரதிபளிக்கும் கூட்டுப் பண்பாட்டு வடிவமாகப் "புதுச்சேரிப் பாணி" என்கிற ஒரு தனி இலக்கணத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம்.

புதுச்சேரியின் தனிச்சிறப்பே மாறுபட்ட தமிழ் மற்றும் பிரெஞ்சு அமைப்புக்கள் ஒன்றோடொன்று ஒட்டி அருகருகே அமைந்திருப்பதுதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகப் புதுச்சேரி தனது தனிச் சிறப்பையும் வித்தியாசமான பிரெஞ்சு-தமிழ் கூட்டுப் பண்பாட்டு அமைப்பையும் வேகமாக இழந்து வருகிறது. மக்கள்தொகைப் பெருக்கம், வளர்ச்சியின் கட்டாயம், பாகப்பிரிவினைகள், வர்த்தக நோக்கு, சுற்றுச்சூழல் மாசுபாடு, பண்பாட்டுச் சின்னங்களைப் பற்றிய விழிப்புணர்வற்ற நிலை போன்றவையே இதற்குக் காரணங்கள்.

பிரெஞ்சு-தமிழ் கூட்டுப் பண்பாட்டுக் கூறுகள் புதுச்சேரி மக்கள் பேசும் மொழிகளிலும் அவர்களின் சமூக நடவடிக்கைகளிலும் பிரதிபளிப்பதை இன்றும் காணலாம்.

-oo0oo-


புதுச்சேரி குறித்த இன்னும் சுவையான தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம் ..